தாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்காலிகத் துறவறத்தை மேற்கொண்டுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு ஜூன் மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த மாதம் 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது.
இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சமன் குனொந்த் என்ற முன்னாள் கடற்படை வீரர், தாமாக முன் வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முங்கு நீச்சலில் அனுபவம் மிக்கவரான அவர், குகையில் சிறுவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டு திரும்பும் போது, போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தார். இதனால் பரபரப்பானது.
பின்னர் கடும் போராட்டத்துக்குப் பின், முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் 4 சிறுவர்களும் பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர். 17 நாட்களுக்குப் பிறகு குகைக்குள் இருந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், இது இரண்டாவது வாழ்வு என கருதும் அவர்கள், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தற்காலிகத் துறவு மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அந்த சிறுவர்களில் 11 பேர் அங்குள்ள புத்த கோவிலில் நேற்று கூடினர். தங்கள் தலையை மொட்டையடித்து, புத்த துறவிக்கான ஆடையை அணிந்தனர். புத்தத் துறவிகளுடன் நின்று, தங்களை மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக, சில நாட்கள் துறவு நிலையை மேற்கொள்வதாக அறிவித்தனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், சிறுவர்கள் நன்றி தெரிவித்தனர்.
12 பேரில் ஒரு சிறுவன் புத்தமதத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் இந்த துறவில் பங்கேற்கவில்லை.