அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வயது குழந்தையை 50,000 டாலருக்கு விற்குமாறு தாயிடம் கேட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வால்மார்ட் முன்பு சுய பரிசோதனைக்காக ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் நின்றிருந்தார். அப்போது அங்குவந்த 49 வயதான ரெபெக்கா டெய்லர் என்ற பெண்மணி குழந்தை மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனை 50,000 டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3 கோடி) விற்றுவிடுமாறும் குழந்தையின் தாயிடம் கேட்டிருக்கிறார். மேலும், குழந்தையின் நீல நிறக்கண்கள் மற்றும் பொன்னிற முடி அழகாக இருப்பதாகவும் எனவே தன்னிடம் கொடுத்து விடுமாறும் விலை பேசியிருக்கிறார்.
முதலில் அந்த பெண் விளையாட்டாக பேசுகிறார் என்று நினைத்த குழந்தையின் தாயார் சிரித்திருக்கிறார். ஆனால் டெய்லரோ நீண்ட நாட்களாக தான் இப்படி ஒரு அழகான குழந்தையை வாங்கவேண்டும் என இருந்ததாகவும், தற்போது தனது காரில் 25,000 டாலர் மட்டுமே இருப்பதால் அந்த விலைக்கு கொடுத்து விடுமாறும் தனது கையில் ஆணை பத்திரம் இருப்பதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறும் கூறியிருக்கிறார். அந்த பெண் மற்றொரு பெண்ணுடன் வந்திருந்ததால் பயந்துபோன குழந்தையின் தாயார் அங்கேயே நீண்ட நேரம் நின்றிருக்கிறார்.
ஆனால் பார்க்கிங் பகுதிக்கு வெளியே காத்திருந்த டெய்லரோ மீண்டும் அந்த பெண்ணிடம் குழந்தையை விற்குமாறு பேரம் பேசியிருக்கிறார். மேலும் கோபமடைந்து 25,000 டாலர் போதவில்லை என்றால் 50,000 டாலர் தருகிறேன் என்று கத்திக் கூறியிருக்கிறார். இதுகுறித்து குழந்தையின் தாயார் போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின்பேரில் டெய்லரை கைதுசெய்த போலீசார் மூன்றாம் நிலை குற்றச்சாட்டின்கீழ் டெய்லரை கைதுசெய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து அமெரிக்க நாளிதழ்களில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.