‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்

‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
Published on

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸார் மிகவும் தாமதமாக செயல்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் கடந்த 24-ம் தேதி இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீஸார் அந்தப் பள்ளிக்குள் நுழைந்து கொலையாளியை சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் போலீஸார் மிகவும் தாமதமாக செயல்பட்டதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. குறிப்பிட்ட சம்பவத்தின் போது கொலையாளி அந்தப் பள்ளிக்குள் காலை 11.28-க்கு நுழைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 3 நிமிடங்களிலேயே அங்கு 20 போலீஸார் வந்துள்ளனர். ஆனால் அவர்கள் உடனடியாக பள்ளிக்குள் செல்லவில்லை. சுமார் அரை மணிநேரத்துக்கு பிறகுதான் அதாவது 12.05 மணிக்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கிருந்த குழந்தைகளின் கதறல் அப்பகுதி முழுவதும் கேட்டிருக்கிறது. அப்போதும் கூட போலீஸார் பள்ளிக்குள் செல்லாமல் பள்ளி வளாகத்துக்குள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்துள்ளனர்.

இதையடுத்து, துப்பாக்கி சத்தமும், குழந்தைகளின் கதறல் ஒலியும் நின்ற பின்னரே போலீஸார் உள்ளே சென்று கொலையாளியை சுட்டுக் கொன்றிருக்கின்றனர். அப்போது மணி மதியம் 12.58. இவ்வாறு சுமார் ஒன்றரை மணிநேரமாக (90 நிமிடங்கள்) துரித நடவடிக்கையில் இறங்க போலீஸார் தாமதித்துள்ளனர். போலீஸார் விரைவாக செயல்பட்டிருந்தால் இத்தனை குழந்தைகளின் உயிர் பறிபோயிருக்காது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், போலீஸாரின் தாமதமான நடவடிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு இழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெக்சாஸ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com