பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ளது தரபன் காவல் நிலையம். இதை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 23 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் தெற்கு வஜிரிஸ்தான் அருகே தேரா இஸ்மாயில் கான் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் தங்களின் ‘வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட’ வாகனத்தை கொண்டு, தாக்குதலை ஏற்படுத்தினர் என்று கூறப்படுகிறது.
இத்தாக்குதலில் காவல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததாகவும், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் காவல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த காவலர்களை டிஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தரபன் தாலுகா முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.