அமெரிக்காவில் ஒரு பள்ளி வகுப்பறையில் சிறுவன் ஒருவன் தண்ணீர் குடிக்கும்போது திடீரென பாட்டில் மூடி சிறுவனின் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொள்ள, சமயோசிதமாக செயல்பட்ட ஆசிரியை மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவனை காப்பாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஈஸ்ட் ஆரஞ்சு சமூக பட்டயப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான் 9 வயதான சிறுவன் ராபர்ட். அவன் பாட்டிலிலிருந்து தண்ணீர் குடிக்க முடிவெடுத்துள்ளான். ஆனால் கைகளால் மூடியைத் திறக்காமல், சிறுவர்களுக்கே உரிய குறும்புத்தனத்தால் அவன் தனது வாயைப் பயன்படுத்தி மூடியை திறந்து தண்ணீர் குடிக்க எண்ணினான். அது மிகவும் விபரீதச் செயலாக மாறிவிட்டது.
அவன் தொண்டைக்குழியில் பாட்டில் மூடி திடீரென சிக்கிக் கொள்ள மூச்சுத் திணறத் தொடங்கினான். அவனால் பாட்டில் மூடியை அவரது தொண்டையிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. மூடி சிக்கியதால் பேசவும் முடியாமல் சைகை காட்டத் துவங்கினான். உடனிருந்த நண்பர்கள் என்னவென்று புரியாமல் திறுதிறுவன விழிக்க , அவன் எழுந்து உதவிக்காக தன் ஆசிரியை ஜானிஸ் ஜென்கின்ஸிடம் ஓடினான். சிறுவனின் சைகையை வைத்து என்ன நடந்தது என்பதை உணர்ந்த அவர் செயலில் குதித்தார்.
அவனது ஆசிரியை சிறுவன் வாயிலிருந்து பாட்டில் மூடியை வெளியே தள்ள “ஹெய்ம்லிச் சூழ்ச்சி நுட்பத்தை” (Heimlich manoeuvre) செய்தார். அந்த முதலுதவி நுட்பம் சரியாக வேலை செய்யவே மூடியை சிறுவன் துப்பிவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினான். ஆசிரியை ஒருவரின் வீரச் செயலை காட்டும் வியத்தகு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஹெய்ம்லிச் சூழ்ச்சி நுட்பம் என்பது சில படிநிலைகளை கொண்ட முதலுதவி. முதலுதவி தேவைப்படும் நபரின் பின்சென்று அவரை முன்னோக்கி சாய்த்து, உங்கள் கையால் அவர்களின் முதுகில் ஐந்து அடிகளைக் கொடுக்க வேண்டும். அடுத்தபடியாக அவரின் இடுப்பைச் சுற்றி உங்கள் கைகளை வைத்து இறுக்கவும். அவரை முன்னோக்கிச் சாய்த்தபடி ஒரே நேரத்தில் உள்நோக்கியும் மேல்நோக்கியும் குலுக்கவும். ஐந்து முறை இப்படிச் செய்ய பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. இப்படிச் செய்வதால் அவரால் மீண்டும் இயல்பாக சுவாசிக்க செய்ய இயலும். ஐந்து வருடங்களாக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஜானிஸ் ஜென்கின்ஸ் உயிர் காக்கும் CPR மற்றும் அடிப்படை முதலுதவியில் பயிற்சி பெற்றவர் என்பதால் சிறுவனை காப்பாற்றும் முயற்சி எளிதாகியுள்ளது.