ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் மற்றும் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு - தொழில் நிறுவனங்கள் இடையே 1600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக நேற்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு ஐக்கிய அரசு அமீரக முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், உலகளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருவதாக தெரிவித்தார். அத்துடன் தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும், தமிழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்வதற்கு உகந்தது தூத்துக்குடி அறைகலன் பூங்கா என்று தெரிவித்த அவர், துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத வகையில், தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது என்று கூறினார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக துபாய் உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சராக தான் பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரூ.1,600 கோடி முதலீடு செய்ய அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நோபல் குழுமம் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஃகு தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைட் ஹவுஸ் இண்டகிரேட்டட் தையல் தொழிற்சாலை ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.