ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்: கடல்நீரைக் காய்ச்சி குடிக்கும் கொடுமை!!

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்: கடல்நீரைக் காய்ச்சி குடிக்கும் கொடுமை!!
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்: கடல்நீரைக் காய்ச்சி குடிக்கும் கொடுமை!!
Published on

மீன்பிடித் தொழிலுக்காக ஈரான் சென்று அங்கு தனித்தீவில் உணவின்றி தவித்து வரும் தமிழக மீனவர்களை, உடனடியாக மீட்டுத்தர உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஏஜெண்டுகள் மூலம் ஈரானுக்குச் சென்றுள்ளனர். சுமார் ஆயிரம் மீனவர்கள் அங்குள்ள கீஸ், சாரக், ஜீரோ உள்ளிட்ட சிறு தீவுகளில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வரும் நிலையில் அங்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பீதியில் தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு தங்களை அழைத்துச் சென்ற ஏஜெண்ட்டுகளை நாடியுள்ளனர். ஆனால் அவர்கள் முறையான பதில் ஏதும் கூறாமல் அலட்சியப்படுத்துவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழல்களில் சுமார் ஒரு மாத காலம் தாங்கள் உணவின்றி படகிலேயே தங்கி தவித்து வருவதாகவும், கடல்நீரைக் காய்ச்சி குடித்து வருவதாகவும் மீனவர்கள் கவலை கூறியுள்ளனர். மேலும் கடலுக்குச் செல்லுமாறு அந்நாட்டு காவல்துறையினரை வைத்து மிரட்டியும், தாக்கியும் ஈரானில் உள்ள‌ முதலாளிகள் வற்புறுத்துவதாகவும் கூறுகின்றனர்.

இப்படியான கடுமையான சூழல்களில் தங்களை தாயகம் மீட்டு வர மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரானில் இருந்து மீனவர்கள் வாட்ஸ்ஆப்பில் வீடியோ அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிழைப்புக்காக ஈரானுக்கு மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தின தினங்களுக்கு முன்பு ஈரானில் இருந்து 50 பே‌ர் மீட்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு சிக்கித் தவித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com