ஆப்கானிஸ்தானில் இறுக்கமான உடை அணிந்து வெளியே சென்ற இளம் பெண்ணை தாலிபான்கள் கொடூரமாக கொன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பலக் மாகாணத்தில் இருக்கும் சமர் காந்த் கிராமம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். அதிலும் ஆடை அணிவதில் மிகுந்த கெடுபிடிகள் இருக்கும்.
இந்நிலையில் நஸானின் எனும் 21 வயதுப் பெண் இறுக்கமான ஆடை அணிந்து வெளியே வந்துள்ளார். இதனை பார்த்த தலிபான்கள் அவரை எச்சரித்தது மட்டுமல்லாமல் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலிபான்களால் கொல்லப்பட்ட அந்தப் பெண் அப்போது பர்தா அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த இளம் பெண் கொல்லப்பட்டதை தலிபான்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதனிடையே தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களை பிடித்துள்ளனர். இதனால் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வசிக்கும் பெண்கள் வேலைக்கு வெளியே செல்லக் கூடாது, அப்படியே வெளியே சென்றாலும் கணவரின் துணையுடன் செல்ல வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளனர்.