“சுதந்திரத்திற்காக அன்று போராடியது இந்தியா; இன்று தலிபான்”: சமாஜ்வாதி எம்பி சர்ச்சை பேச்சு

“சுதந்திரத்திற்காக அன்று போராடியது இந்தியா; இன்று தலிபான்”: சமாஜ்வாதி எம்பி சர்ச்சை பேச்சு
“சுதந்திரத்திற்காக அன்று போராடியது இந்தியா; இன்று தலிபான்”: சமாஜ்வாதி எம்பி சர்ச்சை பேச்சு
Published on

இந்தியா சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்காரர்களிடம் போராடியதை போல் தலிபான் போராடி ஆப்கானிஸ்தானை மீட்டுள்ளது என சமாஜ்வாதி எம்பி ஷாபிக்கர் ரஹ்மான் பார்க் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வந்த போர் பரபரப்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறையவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றி, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். அதே நேரத்தில் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். 4 கார்களில் நிரப்பிய பணத்தை ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் ஏற்ற முடியாத அளவுக்கு அதிக பணம் இருந்ததால் எஞ்சியதை அங்கேயே விட்டுச்சென்றதாகவும் ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அஷ்ரப் கனி, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உடன் ஒமனில் உள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து எப்படியாவது வெளியேறிவிடவேண்டும் என்ற நோக்கில், ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். நாடு தலிபான்களிடம் சென்றிருக்கும் நிலையில் மக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரின் வீடுகளையும் தலிபான்கள் சோதிக்க தொடங்கியுள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் கொடியை அப்புறப்படுத்தினர். தலிபான் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நாடுகள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதனிடையே மனித உரிமைகளை தலிபான் பாதுகாக்க வேண்டும் ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆப்கானின் தற்போதைய சூழல் கவலை அளிக்கிறது எனவும் ஆப்கானில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இந்தியா அந்த கூட்டத்தில் வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்தியா சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்காரர்களிடம் போராடியதை போல் தலிபான் போராடி ஆப்கானிஸ்தானை மீட்டுள்ளது என சமாஜ்வாதி எம்பி ஷாபிக்கர் ரஹ்மான் பார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய போது, “பிரிட்டிஷ் அரசு இருந்தபோது இந்தியா சுதந்திரத்திற்காக போராடியது. அதேபோல் தலிபான் தங்கள் சுதந்திரத்திற்கு போராடியது. அதன்படி தாங்கள் இழந்த நாட்டை அவர்கள் மீண்டும் மீட்டு இருக்கிறார்கள். தங்களின் சொந்த நிலத்தையே அவர்கள் மீட்டு உள்ளனர். தாலிபான்கள் தங்களின் சுதந்திரத்திற்காக ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளை காலங்காலமாக எதிர்த்து போராடி வெற்றி கண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரம் பெற்று, சுயமாக ஆட்சி நடத்த விரும்புகிறார்கள்” என்றார்.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கே.பி.மயூர்யா, ஷாபிக்கர் ரஹ்மான் பார்க்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com