'கல்வி என்பது அடிப்படை மனித உரிமை' - தாலிபன்களுக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம்

'கல்வி என்பது அடிப்படை மனித உரிமை' - தாலிபன்களுக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம்
'கல்வி என்பது அடிப்படை மனித உரிமை' - தாலிபன்களுக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம்
Published on

தாலிபன் உயர்கல்வி அமைச்சகம், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குப் பல்கலைக்கழக கல்வியைக் காலவரையற்ற தடை விதித்து, பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை ஒடுக்கும் வகையில் வெளியிட்ட சமீபத்திய அரசாணை சர்வதேச கண்டனத்தைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிய மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்கல்விக்கான தடையை தாலிபன்கள் விதித்துள்ளனர். தாலிபன்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர். பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகளை மதிக்கும் மிகவும் மிதமான ஆட்சியை ஆரம்பத்தில் தாலிபான்கள் உறுதியளித்த போதிலும், கடந்த ஆண்டு நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து தாலிபான்கள் இஸ்லாமியச் சட்டத்தின் கடுமையான விளக்கத்தைப் பரவலாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே தாலிபன் ஆட்சியில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி பயிலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது என்று சேதி வெளிவந்தது. இதனை உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்திய கடிதமும் வெளியாகியுள்ளது. அமைச்சரவை முடிவின்படி, பெண் மாணவர்களுக்கான அனுமதியை உடனடியாக நிறுத்துமாறு ஆப்கானிஸ்தான் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வமான அரசாக மேற்கத்திய நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அவர்களை முறைப்படி அங்கீகரிக்க வேண்டுமானால் தாலிபான்கள் அந்நாட்டுப் பெண்களுக்குக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன நிலையில் இச்செய்தி வெளியானது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது. ''கல்வி என்பது அடிப்படை மனித உரிமை; பெண்களின் கல்விக்கான கதவு மூடப்பட்டால் அது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தின் கதவு மூடப்பட்டதாகவே பொருள்''என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஆப்கானிஸ்தானுக்கான துணை சிறப்புப் பிரதிநிதி ரமீஸ் அலெக்பாரோவிறகு தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபின் ஆப்கான் முழுவதும் பல போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

-அருணா ஆறுச்சாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com