பப்ஜி மற்றும் டிக்டோக் போன்ற செயலிகள் வன்முறையை ஊக்குவிப்பதால் அவற்றிற்கு தடை விதிக்கப்போவதாக தாலிபான்கள் எடுத்துள்ள முடிவை நெட்டிசன்கள் கேலிசெய்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் பயன்பாட்டிற்கு இன்னும் 90 நாட்களில் தடை விதிக்கப்போவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை மற்றும் ஷரியா சட்ட அமலாக்க நிர்வாகத்தின் உறுப்பினர்களை தொலைத்தொடர்பு அமைச்சகம் சந்தித்த பிறகு இந்த இரு செயலிகளை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுக் கூட்டத்திற்குப் பிறகு, தொலைத்தொடர்பு அமைச்சகம் நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு 90 நாட்களுக்குள், அதாவது 3 மாதங்களுக்குள் பப்ஜி மற்றும் டிக்டாக் இரண்டையும் தடை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. தடை தொடர்பான தகவலை முதலில் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட கம்மா பிரஸ் வெளியிட்டது.
இந்த இரண்டு பிரபலமான செயலிகளுக்கு ஒரு நாடு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. 2020 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பப்ஜி மற்றும் டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளை ஐடி சட்டத்தின் பிரிவு 69 (A) இன் கீழ் தடை செய்தது. ஆனால் இந்த பயன்பாடுகள் "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாதகமானவை" என்று கூறி இந்திய அரசு இந்த செயலிகளை தடை செய்தது. இருப்பினும் வன்முறையை காரணமாக தாலிபான்கள் சொல்லியிருப்பது இணையவாசிகளின் பகடிக்கு ஆளாகியுள்ளது.