தைவான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 1999 ஆம் ஆண்டு 7.2 என்ற அளவில் Nantou county பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2500 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரத்தின்படி இன்று காலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது.
தைவான் நாடே மிகச்சிறிய தீவாக இருக்கும் சூழலில், பெரும்பாலான இடங்களில் இருக்கும் கட்டடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதிலும் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 11 முறை வெவ்வேறு ரிக்டர் அளவுகோலில் தைவானில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தைவானின் வட பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் தெற்கிலுள்ள தீவுகள், பிலிப்பைன்ஸ், சீனாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள தீவுக்கூட்டங்களிலும் நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.