20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நமீபியா அணியுடனான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அந்த அணி ருசித்தது. வெற்றிபெற்ற போதிலும் போட்டி களத்திற்கு வெளியே பல்வேறு விதமான அழுத்தங்களையும், தலிபான்களின் மிரட்டல்களையும் சந்தித்துள்ளனர் ஆப்கன் வீரர்கள். அத்தனைக்கும் இடையிலும், நடப்பு இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் மெச்சத்தக்க ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.
அப்படி என்ன அழுத்தங்களை அந்த அணி சந்தித்தது என்றால், முதல் விஷயம் விளையாடுவதில் அந்த வீரர்களுக்கு இருந்த அரசியல் அழுத்தம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆஃப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மட்டுமின்றி விளையாட்டுகள் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியும் வட்டமிடத் தொடங்கியது. இருப்பினும் திட்டமிட்டபடி இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி நுழைந்தது.
தொடரில் இணைந்துவிட்டாலும்கூட, தலிபான்கள் ஆஃப்கானிஸ்தானின் பெயரையும், பழைய மூவர்ண தேசியக் கொடியையும் மாற்றி இருந்ததால், உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானுக்கு எந்தக் கொடி மற்றும் தேசிய கீதம் பயன்படுத்தப்படும் என்ற குழப்பம் அந்த அணிக்கு இருந்தது. இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கனவே பயன்படுத்தி வந்த கொடி மற்றும் தேசிய கீதத்தையே ஐசிசி பயன்படுத்தியது.
அப்போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட முஜிபுர் ரஹ்மான், மூவர்ணக்கொடியை பார்க்கும் போதுதான் வலிமை கிடைப்பதாக கூறியிருந்தார். ஆனால் முஜிபின் பேச்சுக்கு தலிபான்கள் தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Islamic Emirates of Afghanistan என்ற பெயரிலியே ஆப்கான் வீரர்களை விளையாட அனுமதித்திருந்த தலிபான்கள், வீரர்களின் அரசியல் கருத்துகள், பழைய தேசிய கீதம் இசைக்கும் போது கண்ணீர் சிந்துவது போன்றவற்றால் சினமடைந்தனர்.
Islamic Emirates of Afghanistan பெயரிலேயே வீரர்களை தொடருக்கு அனுப்பியுள்ளோம். முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனியின் ஆட்சியில் அனுப்பவில்லை எனக் கூறிய தலிபான்கள், தேவைப்பட்டால் இனி வரும் காலங்களில் யார் விளையாட வேண்டும் என்ற முடிவையும் தாங்களே எடுப்போம் என தெரிவித்தனர். மேலும் இது போல சர்ச்சைகள் தொடர்ந்தால் ஆப்கான் வீரர்கள் தலிபான் கொடிக்கு முத்தமிட்ட பின்னரே காபூல் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கடுமையாக எச்சரித்தனர்.
இவ்வாறாக பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்த போதிலும் ஆஃப்கானிதான் அணி நடப்பு தொடரில் விளையாடிய 3 போட்டிகளில், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுடான போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடனான போட்டியிலும் கடைசி வரை போராடியே தோல்வியுற்றது. குரூப் 2-ல் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அல்லது இந்தியாவே அரையிறுதிக்குச் செல்லும் என பேசப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் வல்லுநர்களின் பார்வையை ஆப்கான் வீரர்கள் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர்.
அழுத்தங்களை கடந்து அசத்தி வரும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- பிரவீண்குமார்.