சிட்னி கடற்கரையில் சுறா ஒன்று கடலில் நீந்திய ஒருவரை தாக்கிய சம்பவம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் நடந்துள்ளது.
சிட்னியில் உள்ள கடற்கரை ஒன்றில் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளான நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் கூடியிருந்த சுற்றுலாப்பயணிகள், மீனவர்கள் கண் முன்னே கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் ஒன்று கடித்துத் துண்டாக்கி கடலுக்கடியில் இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினருக்கு, அவரது உடலில் சில பாகங்களும், ஆடையும் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அதிகாரிகள், கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதித்தனர்.
சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் சிட்னி கடற்கரையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் திகிலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாகி சிட்னியில் ஒருவர் உயிரிழக்கும் முதல் நிகழ்வு இதுவாகும்.
இதையும் படிக்க: பிரேசில்: நிலச்சரிவில் சிக்கி 58 பேர் உயிரிழப்பு- கோரத்தை காட்டும் ட்ரோன் காட்சி