ஸ்விட்சர்லாந்தில் உருகிய அலுமினியம் டப்பில் விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அந்த அலுமினியத்தின் கொதிநிலை 720 டிகிரி செல்ஷியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு ஸ்விட்சர்லாந்தில் செயிண்ட் கால்லன் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலையின் மேற்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த எலக்ட்ரீஷியன் இளைஞர் தவறுதலாக கொதிக்கும் உலைக்குள் விழுந்ததாக ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இருவர் வேலை செய்துகொண்டிருந்தபோது 25 வயது இளைஞர் மேற்புறத்திலுள்ள திறந்தபகுதி வழியாக விழுந்துவிட்டார்.
அதிர்ஷ்டவசமாக எலக்ட்ரீஷியன் முழங்கால் வரை அலுமினியத்தில் மூழ்கி இருந்ததால், அவரால் தன்னை வெளியே இழுக்க முடிந்தது என்று போலீசார் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பலத்த காயமடைந்த அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் எனவும், உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உருகிய அலுமினியமானது தீவிர காயத்தை ஏற்படுத்தக்கூடியது என்கிறது 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. உலோகத்தால் ஏற்படும் தீக்காயங்களில் சுமார் 60 சதவீதம் அலுமினியம் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறது.