சுவிட்சர்லாந்தின் நிட்வல்டன் மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது நிறைந்த முதியவருக்கு, அவருடைய மனைவி, பிரியமாய் பீட்சா செய்து கொடுத்துள்ளார். ஆனால் அவரது கணவரோ அந்த பீட்சாவைச் சாப்பிடவில்லை எனத் தெரிகிறது.
தன் கணவர் அந்த பீட்சாவைச் சாப்பிடவில்லை என்கிற வருத்தத்தில் மனைவி, அவர்மீது கோபமாய் இருந்துள்ளார். அத்துடன், அவர் தன்னை அவமதித்துவிட்டதாகவும் கருதிய மனைவி, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை தாங்க முடியாத அந்த கணவர், தாம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதில், அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மனைவியைக் கொன்றது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார், கணவர். ‘இது தற்செயலாக நடந்துவிட்டது’ எனவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து விசாரணை நடத்தியபோது கணவர் மகிழ்ச்சியில் இருந்துள்ளார். இதனால், அவர் வேண்டுமென்றே தன் மனைவியை சுட்டுக் கொன்றிருக்கலாம் என போலீசார் கருதுவதுடன், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்னதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி அவரது மனைவி ஆல்கஹால் அருந்தி இருப்பதாகத் தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், ’தானும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம்’ எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை போதை அதிகமாகி, அதனாலும்கூட மனைவியைக் கொன்றிருக்கலாம் என்ற நோக்கிலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஓடும் ரயிலில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்... வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்?