ஹாங்காங்கில் நடைபெற்ற துறைமுகத்தை நீந்திக் கடக்கும் நீச்சல் போட்டியில், நூற்றுக்கணக்கானோர் ஆர்வமாக பங்கேற்றனர்.
ஹாங்காங்கில் அரசுப் பள்ளிகள் துவங்கி தனியார் பள்ளிகள் வரை நீச்சல் கட்டாயப் பாடம் என்பதால் ஹாங்காங்கில் அனைத்து மக்களும் நீச்சல் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். இதை ஊக்குவிப்பதற்காகவே, துறைமுகத்தை நீந்திக் கடக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த துறைமுக நீச்சலில் பங்கு கொள்ள 3000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், குலுக்கல் முறையிலேயே இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பல்வேறு பிரிவினருக்காக நடைபெற்ற இந்த நீச்சல் விழாவில் சர்வதேச நீச்சல் வீரர்களுக்கென தனி பிரிவு உள்ளது கூடுதல் அம்சம். அதேபோல் போட்டிப் பிரிவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் எந்த வித அசம்பாவிதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதால் அரசு உதவியுடன் இந்த நீச்சல் விழா நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ உதவி உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஹாங்காங்கில் நடைபெற்ற இந்த நீச்சல் போட்டியை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.