’ப்ளூ வேல் சேலஞ்ச்’ என்ற இணைய விளையாட்டுக்கு மாற்றாக, பிங்க் வேல் சேலஞ்ச் என்ற புதிய இணைய விளையாட்டு இப்போது பிரபலமாகி வருகிறது.
ப்ளூ வேல் சேலஞ்ச் என்ற இணைய விளையாட்டு சுமார் 130 சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஊருடுவியுள்ள இந்த விளையாட்டுக்கு சில மாணவர்கள் பலியாகியுள்ளனர். கேரளாவில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதன் காரணமாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கூகுள், யாகூ உள்ளிட்ட இணையதளங்கள் இந்த விளையாட்டுக்கான இணைப்புகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ’பிங்க் வேல் சேலஞ்ச்’ என்ற புதிய விளையாட்டு பிரேசிலில் இருந்து வெளியாகி இருக்கிறது. இந்த விளையாட்டு, ப்ளூ வேல் சவால்களுக்கு மாறாக உள்ளது.
அன்பை பரப்புவது, நேசிக்கச் செய்வது உள்ளிட்ட விஷயங்களைக் கொண்டுள்ள இந்த விளையாட்டு, ப்ளூ வேல் போன்றே 50 சவால்களை கொண்டுள்ளது. அனைத்தும் வித்தியாசமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கும் ஒருவரிடம் பேசுவது, ஒருவர் மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறீர்கள் என்பதை எழுதுவது என்பது உட்பட இனிமையான சவால்களைக் கொண்ட இதன் ஐம்பதாவது சவால் ஓர் உயிரை காப்பாற்றுவது. இந்த விளையாட்டுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.