அமெரிக்க அதிபர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வரும் அதேவேளையில், சத்தமில்லாமல் இந்திய வம்வசவாளியைச் சேர்ந்த சிலர் செனட் உறுப்பினராக தேர்வாகி கலக்கி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் பிரமிளா ஜெயபால். மூன்றாவது முறையாக இவர் செனட் உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார் என்பது தமிழர்கள் பெருமைப்படக்கூடிய விஷயம். தமிழர்கள் ஏன் பெருமைப்பட வேண்டும் என்கிறீர்களா... ஆம், பிரமிளா ஜெயபாலின் பூர்விகம் தமிழகம்தான். சென்னையில் பிறந்தவர்.
கல்விக்காக சென்னையில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்த்தவர், பின்னாளில் அந்நாட்டு குடிமகளாக மாறினார். பிரமிளாவின் அரசியல் என்ட்ரி, எல்லோரையும் போல இல்லாமல் சமூகப் பணிகள் மூலமாக வந்தது. அமெரிக்காவில் சமூக பணிகளை திறம்பட செய்து, அதன் அடுத்தகட்டமாக அரசியலுக்குள் நுழைந்தார் பிரமிளா. பின்னர், அதுவே அவரை தீவிர அரசியல்வாதியாக்கியது.
எந்தப் பணி கொடுத்தாலும், அதை திறம்பட செய்வது பிரமிளாவின் வழக்கம். அதுவே அவருக்கு நற்பெயரை பெற்று தந்தது. அமெரிக்க ஜனநாயக கட்சியிலும் அவர் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடிக்க, வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் செனட் உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட பிரமிளா, அந்தப் பகுதியில் வாழும் அமெரிக்க - இந்தியர்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையின் முதல் இந்திய வம்சாவளி பெண் எம்.பியாக தேர்வாகினார். அதில், அவரின் சிறப்பான பணியால் இதோ நேற்று முன்தினம் மூன்றாம் முறையாக எம்.பி.-யாகி இருக்கிறார். கடந்த முறை இவர் எம்.பி.-யாக இருந்தபோது இரண்டு சம்பவங்கள் செய்தார். அதுவும் இரண்டு தமிழர்களுக்கு தொடர்புடையது. அதைப் பற்றியதான் இந்த ஃப்ளாஷ்பேக். இந்த இரண்டு சம்பவங்களுமே கடந்த வருடம் டிசம்பரில் நிகழ்ந்தவை.
முதல் சம்பவம்...
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. தமிழரான இவர் கூகுள் மீது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அமெரிக்க நாடாளுமன்றக் குழு முன் ஆஜராகினர். அப்போது நாலாபுறமும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சுந்தர் பிச்சையை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்க, ஒரே ஒருவர் மட்டும் வாழ்த்து சொல்லி செனட் சபையை ஆச்சர்யப்படுத்தினார். அவர், பிரமிளா ஜெயபால்தான்.
"சுந்தர் பிச்சை நீங்கள் பிறந்து வளர்ந்த அதே தமிழகத்தில்தான் நானும் பிறந்தேன். சிஇஓவாக இருந்து கூகுளை நீங்கள் வழிநடத்திச் செல்வதை காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகித்து வருகிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன்" என்று பேசி ஆச்சர்யப்படுத்தினார்.
இரண்டாவது சம்பவம்...
சுந்தர் பிச்சையை வாழ்த்திய சில நாட்களிலேயே இன்னொரு தமிழர் மூலமாக பிரமிளா மீது சர்ச்சை வந்தது. அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இவர் கடந்த டிசம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அமெரிக்க எம்.பி-க்களைச் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த எம்பிக்கள் குழுவில் பிரமிளா ஜெயபாலும் இடம்பெற்றிருந்தார். முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும், காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமும் கொண்டுவந்தார் பிரமிளா. இதை நினைத்துக்கொண்டு, தான் சந்திக்க இருக்கும் எம்பிக்கள் குழுவில் பிரமிளா இடம்பெறக்கூடாது என்று அமைச்சர் ஜெய்சங்கர் போர்க்கொடி தூக்கினார். இது சர்ச்சையாக வெடிக்க, அதன்பின் எம்பிக்கள் கூட்டமே ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையரசு