பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்டங் நகரில் நேற்று நடைபெற்ற பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் இருந்த அடையாளம் தெரியாத நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். இதில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் வேட்பாளர் நவாப்ஸதா சிராஜ் உள்பட 128 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2014 ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் உயிரிழந்த சிராஜ் பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நவாப் அஸ்லாம் ரெய்சானியின் சகோதரர் ஆவார்.
மஸ்டங் நகரில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் சிராஜின் மகன் ஹக்மல் ரெய்சானி கொல்லப்பட்டார். மஸ்டங் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று பன்னுவில் கைபர் பக்துன்வா மாகாண முதலமைச்சர் அக்ரம் கான் துரானியின் காரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.