உக்ரைனில் இருந்து இதுவரை 15,920 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு பயின்று வரும் இந்திய மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு தாய்நாடு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. போர் சூழல் காரணமாக உக்ரைனுக்குள் இந்திய விமானங்கள் செல்ல முடியவில்லை. இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மாணவர்களை வருமாறு கூறி, அங்கிருந்து விமானம் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உக்ரைனில் இருந்து இதுவரை 15,920 இந்திய மாணவர்கள் 76 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு தாய் நாடு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இன்னும் உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து மீட்கப்படுவர். கடைசி இந்திய மாணவரை மீட்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும்" என அவர் கூறினார்.