அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் நாய்க்குட்டி ஒன்றை தவறுதலாக வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார் அதன் உரிமையாளர்.
அந்நேரம் வெயிலின் தாக்கம் அதிகமிருந்துள்ளது. கிட்டத்தட்ட 37 டிகிரி செல்ஸியஸ் வெப்பம். அதனால் வெளியில் இருந்த வெப்பத்தை விட காருக்குள் வெப்பத்தின் அளவு அதிகமிருந்திருக்கும்.
இந்நிலையில் வெப்பத்தை தாங்க முடியாமல் காருக்குள் பூட்டப்பட்ட அந்த நாய்க்குட்டி குரைக்க ஆரம்பித்துள்ளது. அதனால் முடிந்தவரை சத்தம் போட்டு குரைத்துள்ளது. அந்த சப்தத்தை கேட்ட வழிப்போக்கர் ஒருவர் காருக்குள் இருந்த நாயை பத்திரமாக மீட்டுள்ளார்.
“நான் அந்த வழியாக போன போது நாய் ஒன்று வாகனத்தில் உள்ளேயிருந்து குரைக்கின்ற ஒலியை கேட்டேன். அப்போது வெயிலும் அதிகமாக இருந்தது. உடனடியாக காரின் கதவினை உடைத்து அதை காப்பாற்றினேன். அப்போது அது மயக்க நிலையில் இருந்தது.
அதனால் அதை கொஞ்ச நேரம் எனது கைகளில் வைத்திருந்தேன். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தேன்” என சொல்கிறார் நாயை காப்பாற்றிய வழிப்போக்கன். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நாயின் உரிமையாளரை அடையாளம் கண்டு பத்திரமாக அதை ஒப்படைத்துள்ளனர்.
அந்த நாய்க்குட்டியின் பெயர் ‘பூமர்’ என தெரியவந்துள்ளது. ‘காருக்குள் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ வைத்து விட்டு செல்ல வேண்டாம்’ என மக்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர் பாதுகாப்பு அதிகாரிகள்.