ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து அரபுநாடுகளில் இருந்து ஊர் திரும் பமுடியாமல் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண்.
துபாயில் வேலையின்றி தவித்த 345 தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக உணவளித்து, தங்குவதற்கு இடமளித்து உதவியுள்ளார் முன்னணி தனியார் கம்ப்யூட்டர் நிறுவன தொழிலதிபர் உமாசங்கரி. மேலும், இருநூறுக்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்பவும் பாஸ்போர்ட், விமான டிக்கெட் உள்பட முக்கியமான உதவிகளைச் செய்துள்ளார்.
தொடக்கத்தில் அரபு அமீரக நிறுவன முதலாளிகளிடம் இருந்து, பாஸ்போர்ட் பெறுவதற்கு நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். முதலில் அவர்கள் மறுத்துள்ளார்கள். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் பெற்று தொழிலாளர்களைப் பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்து அரிய சேவை செய்திருக்கிறார் உமாசங்கரி. மேலும், மீதமிருப்பவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும் வரை உணவுப் பொருள்களைக் கொடுத்து பாதுகாத்தும் வருகிறார். இந்த சேவையை அரபு நாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல், தாய்நாட்டில் உதவிவேண்டி தவிப்பவர்களுக்கும் செய்துவருகிறார்.
“இத்தனை ஆண்டுகள் அரபு நாடுகளில் வேலை செய்து சம்பாதித்தவர்கள் வேலை இல்லாமல் என்ன செய்வார்கள். பாவமாக இருந்தது. சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். அதை அறிந்து நண்பர்களுடன் சேர்ந்து உணவு வசதிகளுடன் தங்குமிடம் ஏற்பாடு செய்தோம். அதற்கடுத்து அவர்களில் 245 பேரை ஊருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தேன். ஒற்றைக் காசு இல்லாமல் ஊருக்குப் போய்விட்டார்கள்.
குழந்தைகளின் படிப்புக்கு பணமில்லை மேடம் என்று என்னிடம் கவலையுடன் பேசினார்கள். தனி மனுஷியாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவிட்டேன். எல்லோருமே தினக்கூலியாக வேலை செய்தவர்கள் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் அரசு கொஞ்சம் யோசித்தால் நன்றாக இருக்கும்” என்று துபாயில் இருந்து கேட்டுக்கொண்டார் உமாசங்கரி.
அரபு நாடுகளில் வேலைவாய்ப்புத் தொடர்பான எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தமிழகத் தொழிலாளர்கள் அவரைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.