'உங்கள் பிராண்டை பிரபலமாக்க கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்துவதை தவிருங்கள்' என மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ், ‘ஃபெனோமினல்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் தனது அத்தையான கமலா ஹாரிஸின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, மீனா ஹாரிஸ் தனது பிராண்டை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகைக்கு புகார்கள் வந்துள்ளது. சமீபத்தில் ‘Vice President Aunty’ என்ற வாசகங்களுடன் பிரிண்ட் ஆன ஸ்வெட்ஷர்ட் அதிகம் விற்பனையானது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் சட்டக் குழு, அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ, சமூக வலைத்தள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்" என்று மீனா ஹாரிஸ்க்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் மீனா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் என்பதால், மீனா ஹாரிஸ் பதிவிடும் கருத்துகள் துணை அதிபரின் ஆதரவு பெற்றவை என்ற முன்முடிவுக்கு பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால் சமூக வலைதளப் பதிவுகளைப் கவனமாக பகிருமாறு மீனா ஹாரிஸ்க்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.