அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளி ஸ்டீஃபன் பட்டாக் ஓய்வு பெற்ற கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் லாஸ்வேகாஸ் அருகில் உள்ள மெஸ்கொயிட் என்ற சிறிய நகரில் மூத்த குடிமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில்தான் வசித்து வந்துள்ளார். இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்பதற்காகவே அதன் எதிரே அமைந்திருந்த மிகப்பெரிய ஹோட்டலில் நான்கு நாட்களுக்கு முன் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டலின் 32-வது அறையில் இருந்துதான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்து காவல்துறையினர் விரைவதற்குள் பட்டாக் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மரிலோ டான்லே என்ற பெண்ணின் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதை மறுத்துள்ள எப்ஃபிஐ அதிகாரிகள், மனநோய் காரணமாகவே பட்டாக் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.