நாற்காலியில் அமர்ந்தே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்..!

நாற்காலியில் அமர்ந்தே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்..!
நாற்காலியில் அமர்ந்தே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்..!
Published on

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெ‌ற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினாலும், உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்து ஒட்டுமொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். “கை கால்கள் செயல்படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். விரைவில் மரணம் ஏற்படும்” ஸ்டீபன் ஹாக்கிங்கின் 21 ஆவது வயதில் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை.

1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார்.


 
அவரது தந்தை உயிரியல் மற்றும் மருத்துவத்துறை ஆய்வாளராக இருந்ததால், சிறு வயது முதலே ஹாக்கிங்கும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வத்துடன் காணப்பட்டார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் பயின்ற அவர், காஸ்மோலாஜி எனப்படும் அண்டவியல் துறையில் பிஹெச்.டி பயில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். பனிச்சறுக்கு விளையாட்டின் போது கீழே விழுந்த அவரை மருத்துவர்களிடம் காண்பித்தனர் பெற்றோர். சரி செய்ய முடியாத ஏஎல்எஸ் எனப்படும் நரம்பு முடக்குவாத நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது மருத்துவர்கள் அவருக்கு அளித்த வாழ்நாள் கெடு இரண்டே ஆண்டுகள்.

எனினும் மனம் தளராமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே தனது பிஹெச்டியை முடித்தார். பின்னர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அவரது பேசும் திறனையும் இழந்தார். எனினும் அவரது முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக அவரது மாணவர்கள், வாய்ஸ் சிந்தஸைசர் என்ற கருவியை உருவாக்கினர். ஹாக்கிங்கின் மூளை நரம்புகளை இந்தக் கருவியோடு இணைத்து, அவர் பேச நினைப்பவை வார்த்தை வடிவங்களாக கருவியில் வெளிவரும் வகையில் அதை உருவாக்கினர்.

பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஹாக்கிங். அண்டவியல் துறையில் செய்த ஆய்வுகள், பிரபஞ்சம் குறித்த பல புதிர்களுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்தன. black holes எனப்படும் கருந்துகள்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் இயற்பியல் துறை ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. காலத்தின் துவக்கம் மற்றும் கோட்பாடுகள் குறித்த அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல விஞ்ஞானிகளையும் பிரமிக்க வைத்தது.

எழுத்தாளராகவும் பரிணமித்த இவரது படைப்புகளில், A BRIEF HISTORY OF TIME, அறிவியல் ஆய்வு புத்தகங்களிலேயே மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. சண்டே டைம்ஸில் தொடர்ந்து 237 வாரங்களுக்கு அதிக விற்பனையான புத்தகங்களில் முதல் இடத்தை பிடித்தது இந்தப் புத்தகம். ஒரு கோடி பிரதிகள் விற்று சாதனை படைத்தது.

ஐசக் நியூட்டனால் அலங்கரிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Lucasian Professor of Mathematics பதவி கடந்த 1979-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விண்வெளிக்கு ஒருமுறை கூட சென்றது இல்லை. எனினும் ஒரு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தில் அண்டார்டிகா மேலே பறந்து ஈர்ப்பு விசை அற்ற நிலையை உணர்ந்திருக்கிறார். கனடா, பிரிட்டன், எல் சால்வடோர் உள்ளிட்ட பல நாடுகளில் இவரது பெயரில் கட்டிடங்கள் உள்ளன. பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ள ஹாக்கிங், சக்கர நாற்காலிக்குள் முடங்கி விடாமல், தனது சிந்தனை வீச்சால், உலக எல்லைகளை எல்லாம் கடந்து பயணித்தார் என்பது மாபெரும் உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com