சீனாவில் சந்தை நிலைமை சரியாக இல்லாததால், அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் (starbucks) கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு போட்டியாகப் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காபி பிராண்டுகள் வந்துள்ளன. இதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த லக்ஷமன் நரசிம்மன் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அமெரிக்காவின் பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார். லக்ஷமன் நரசிம்மன் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஸ்டார்பக்ஸ் உண்மையான காரணத்தைத் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த மாதம் அவர் அளித்த பேட்டிதான், அவரது வேலைக்கு வேட்டு வைத்ததாக நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். அவர் கடந்த மாதம் அளித்த பேட்டியில், “நான் எப்போதும் மாலை 6 மணிக்குமேல் பணிபுரிய மாட்டேன்; அதற்குள்ளாகவே, அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவேன்’’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லக்ஷமன் நரசிம்மனுக்கான இடத்தில் புதிதாகத் நியமிக்கப்பட்டுள்ள சி.இ.ஓ. பிரையன் நிக்கோலின் சம்பளம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மொத்தமாக 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 948 கோடி ரூபாய் ஆகும். இதில் 10 மில்லியன் டாலர்கள் அவர் இந்த வேலையை ஏற்றுக்கொள்வதற்கான போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது. 75 மில்லியன் டாலர்கள் ஈக்விட்டி பங்காக வழங்கப்படுகிறது. தவிர, ஆண்டுச் சம்பளம் 1.6 மில்லியன் டாலர்கள். இத்துடன் ஆண்டு போனஸ் மற்றும் பிற கொடுப்பனவுகள் என மொத்தமாக இவருக்கு 113 மில்லியன் டாலர்கள் ஊதியமாகக் கிடைக்கிறது.
மேலும் இவர் தன்னுடைய இருப்பிடத்திலிருந்து நிறுவனத்தை கவனித்துக் கொள்ளலாம் எனவும், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விமானத்தையும் இவர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன விமானத்தை பயன்படுத்தி வீடு மற்றும் நிறுவன தலைமையகம் மற்றும் சீட்டலில் உள்ள பிரதான அலுவலகம் ஆகியவற்றிற்கு இவர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்டார்பக்ஸ், ”இந்த துறையில், பிரைன் நிக்கோல் மிகச்சிறந்த தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். எனவேதான் அவருக்கு நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக வழங்குகிறோம். நீண்டகால அடிப்படையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இவர் உறுதுணையாக இருப்பார்” என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல QSR பிராண்டான சிபோட்லே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் பிரையன் நிக்கோல். இவர் சிபோட்லே நிறுவனத்தில் பணியாற்றிய போது அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அதனால், சிபோட்லே நிறுவனத்தில் பிரையன் நிக்கோல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவர், அமெரிக்காவின் சிறந்த உணவக தலைமை நிர்வாக அதிகாரியாகப் பாராட்டப்படுகிறார்.
அவரது நியமனம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பெரிய வெற்றி என்று பல நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்தகாலத்தில் மிகவும் குறைவாகவே உயர்ந்துள்ளன. ஆனால், பிரையன் நிக்கோலின் நியமனத்திற்குப் பிறகு, பங்குகள் அதிரடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இவருடைய நியமனம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. இதன்மூலம் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது.