இலங்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என முன்னாள் ராணுவ தளபதியும், எம்.பியுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி அதிபர் மைத்ரிபால சிறிசேன அண்மையில் உத்தரவிட்டிருந்தார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்து அவருக்கு பதவிபிரமாணமும் செய்துவைத்தார். இந்த விவகாரம் இலங்கையில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புதிய தலைமுறை இலங்கை சென்று கலநிலவரங்களை பதிவு செய்துள்ளது. புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய சரத் பொன்சேகா, “அதிபர் அரசமைப்பு சட்டத்தை மீறியதால் தான் இவை எல்லாம் நடந்தன.
அதிபர் ஜனநாயகத்தை மீறி செயல்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருக்கும் பிரதமரை அவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். எனவே நாங்கள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கோரினோம். நாடாளுமன்றத்தில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். ரணில் தான் பிரதமராக இருப்பார்” என தெரிவித்தார்.
அதிபர், பிரதமரை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறாரே? என்று புதிய தலைமுறை செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அரசியலமைப்பை படித்துப் புரிந்து கொண்டாலே அதிபருக்கு அவருடைய அதிகாரங்கள் தெரிந்துவிடும். 5 வயது குழந்தை கூட இதைப்புரிந்து கொள்ளும்” என்று பதிலளித்தார். மேலும், தற்போது உங்களுக்கு எத்தனை எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது? என்ற கேள்விக்கு, 225 பேரில் எங்களுக்கு தற்போது 125 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. வாக்கெடுப்பின் போது மேலும் பலர் எங்களுடன் இணைவர். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் எங்களுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள்” எனக் கூறினார்.