இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக அநுர குமரா திசநாயக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக புதிய சட்டங்களை இயற்றுவதில் ஆளும் அதிபர் தரப்பு கட்சிக்கு சிக்கல் இருந்தது. இந்த நிலையில், பதவியேற்ற அடுத்த நாளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார் அதிபர் அநுர குமரா திசநாயக.
இந்தச் சூழலில்தான் இலங்கையில் நாளை மறுநாள் (நவ.14) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பரப்புரைகள் நேற்றுடன் முடிவடைந்தன. தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக இலங்கை அதிபர் அநுர குமரா திசநாயக கடந்த மூன்று நாட்களாக இலங்கையின் வடக்கு மாகாண பகுதியான யாழ்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, உள்ளிட்ட தமிழ்மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நவ.14-ல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் சுமார் 70 ஆயிரம் போலீசார் பாதுகாபுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் களத்தில், ஆளும் கட்சியான அநுர குமரா திசநாயக தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மையுடன் களமிறங்கியுள்ளது. இது தவிர, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் போட்டியிடுகிறது. இதில் 21 கட்சிகளும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், சஜித் பிரேமதாசா தலைமையிலான சமாகி ஜன பலவெகய என்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி களத்தில் உள்ளது. இக்கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. முன்னதாக, சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் களத்தில் இருக்கிறது. பிரபலமான இக்கட்சிகளைத் தவிர எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன பலய, ரஞ்சன் ராமநாயகே தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் உள்ளிட்டவையும் தேர்தல் களத்தில் உள்ளன. இதனால் கடுமையான போட்டி நிலவுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் மெஜாரிட்டிக்கு 113 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். மொத்தமுள்ள 225 இடங்களில் 196 உறுப்பினர்கள் நேரடியாக வாக்காளர்கள் மூலமாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும்.
ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். அதாவது மூன்றில் இரண்டு பங்கு இடங்கள்.
சிறப்பு மெஜாரிட்டி இருந்தால் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிபர் அநுர குமரா திசநாயகவின் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை அரசியலை எடுத்துக்கொண்டால் ராஜபக்சே குடும்பம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில், ராஜபக்சே குடும்பத்தினர் இந்த தேர்தலில் போட்டியிடாதது பேசுபொருளாகி உள்ளது.