1970ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி கொழும்புவில் பிறந்தவர்தான் ஹரிணி அமரசூரிய . இவர் 1991 முதல் 1994ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் உள்ள இந்துக் கல்லூரியில் பயின்று சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆஸ்திரேலியாவில் கல்வியைத் தொடர்ந்த இவர் மெக்குவரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் முதுகலைப் பட்டமும் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும்பெற்றார். அதன் பின்னர் இலங்கை திரும்பிய ஹரிணி சில ஆண்டுகள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் பயிற்சியாளராகப் பணியாற்றினார். அதன்பிறகு இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராகத் தனது பணியைத் தொடங்கினார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி' (ஜனதா விமுக்தி பெரமுன) வேட்பாளரான அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது தேசிய மக்கள் சக்திக் கூட்டணி சார்பில் அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். பெரும்பான்மை இல்லாதகாரணத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் திசநாயக. இடைக்காலப் பிரதமராக ஹரிணி அமரசூர்யா தேர்வு செய்யப்பட்டார்.., அதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலின் முடிவில் அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றது.
இந்நிலையில், அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அதில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றிருக்கிறார். இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றிருக்கிறார்.
என்னதான் வளர்ந்த நாடுகளாக இருக்ககூடிய மேலை நாடுகளில் மற்ற எல்லத்துறைகளிலும் பெண்களுடைய வளர்ச்சி அபரமானதா இருந்தாலும் உலகிலேயே முதன் முதலாக பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டது இலங்கையில் தான். 1960ம் ஆண்டு இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக பதவியேற்றார். இலங்கையில் மட்டுமல்லாது உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெறுமையும் அவரைச் சேர்ந்தது. தொடர்ந்து அவரின் மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்து இருக்கிறார். அவருக்குப் பிறகு தற்போது ஹரிணி அமர்சூரிய பிரதமராக பதவியேற்றுள்ளார். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஹரிணி அமரசூரிய தற்போது பதவியேற்றுள்ளார். யார் இந்த ஹரிணி அமரசூரிய ? அரசியலில் அவர் கடந்து வந்த பாதைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் ?
தொடக்கம் முதல் பாலின சமத்துவம் மற்றும் கல்வி அமைப்பில் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த இவருக்கு, கடந்த 2019ல் ஜேவிபி கட்சியின் அறிமுகம் கிடைக்கிறது. 2019 அதிபர் தேர்தலில் தேர்தலில் அநுரவுக்கு ஆதரவாக இவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். பின்னர் கல்வியில் இருந்து அரசியலுக்குள் கடந்த 2020ம் ஆண்டு அடியெடுத்து வைத்தார் ஹரிணி. 2020 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் 2024 அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்காக ஹரிணி அமரசூரிய, சுமார் 21,500 கிலோ மீட்டர் வரை பயணித்து பரப்புரையில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாது அனுர குமார திசநாயக்கவுக்காக பெண்கள் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் சுமார் 6.55 லட்சம் விருப்ப வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிகமான வாக்குகளை இதற்கு முன்னர் எந்த நாடாளுமன்ற வேட்பாளரும் பெறவில்லை. இத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஹரிணி தற்போது இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். பதவியேற்பின்போது அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு போர் தொடங்கியதிலிருந்து தமிழ் மக்களுக்கு இலங்கையில் ஏராளமான கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. மற்ற சிறுபான்மையினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நீதிக்கான தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே நீதித்துறையை அனைத்து மக்களுக்குமானதாக மாற்ற ஹரிணி உறுதியேற்றுள்ளார்.
பெண்ணுரிமை ஆர்வலராகவும், கல்வியாளராகவும் ஹரிணி அறியப்பட்டிருந்தாலும் இடதுசாரி சித்தாந்தத்தில் தீவிர பிடிப்புடையவராக அவர் அறியப்படுகிறார். அதேபோல இலங்கையின் கல்வி முறை, வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த தனது ஆய்வுக்காகவும் இவர் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார். ஆசியாவிலேயே மிகப்பழமையான கல்வி முறையை இலங்கை கொண்டிருப்பதாகவும், இது காலாவதியாகவிட்டதால் மாற்றம் வேண்டும் என்றும் இவர் தொடர்ந்து கூறி வருகிறார். இது அரசியல் வட்டரத்தில் பெறும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.