இலங்கையில் இருந்து வேலை தேடி துபாய் வந்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்காததால் பூங்காவில் தங்கும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள அல் ஹூதைபா பூங்காவில் இருபதுக்கும் அதிகமானவர்கள் தூங்கியதைக் கண்ட தன்னார்வலர்கள் தங்குமிடம் அளித்து உதவியுள்ளனர்.
துபாய்க்கு வந்து பூங்காவில் தவித்தவர்களுக்கு சமூகப் பணியாளர்கள், இலங்கையின் சஹானா நல அமைப்பு மற்றும் இலங்கை துணைத் தூதரகமும் இணைந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
"இலங்கையில் இருந்து வந்தவர்கள் அனைவருமே விசிட் விசா மூலம் வேலை தேடிவந்துள்ளார்கள். சமூக நல அமைப்புகள் மூலம் பூங்காவில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையான இடத்தை ஏற்பாடு செய்துள்ளோம் " என்கிறார் துபாய்க்கான இலங்கை துணைத் தூதர் நலிந்தா விஜரெத்னா.
வேலை தேடி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஊர் திரும்புவதற்குப் பணமில்லை. குளிப்பதற்குக்கூட வசதியின்றி தவித்துள்ளார்கள். சாலையில் செல்லும் மக்கள் அளித்த உணவை வைத்து நாட்களைக் கடத்தியுள்ளார்கள். தற்போது அவர்கள் அனைவரும் செப்டம்பர் 10 ம் தேதியன்று இலங்கை செல்வதற்கு விமானப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.