தீவிரமடையும் மக்கள் போராட்டம் - இலங்கையில் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் இரண்டாவது முறையாக அவசர நிலை நேற்று நள்ளிரவு பிரகடனப்படுத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கு, தவறான நிதிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கையில் பொருளாதார சூழல் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இலங்கை மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் சவாலாக மாறிப் போயிருக்கிறது.
எரிபொருட்களை வாங்குவதற்கு நீண்டவரிசையில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், அதிபர் கோத்தய ராஜபட்சவை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த மாதம் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், போராட்டத்தை பாதுகாப்புப் படையினரால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
இந்த சூழலில், பொதுமக்களுடன் சேர்ந்து தற்போது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொழிற்சங்கங்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. மறுபுறம், அந்நாட்டு நாடாளுமன்றத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் இரண்டாவது முறையாக மீண்டும் அவசரநிலை நேற்று நள்ளிரவு அமல்படுத்தப்பட்டது. நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த அவசரநிலை கொண்டு வரப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.