நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த தவறுகளை தான் செய்ததாக ஒப்புக்கொண்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச , அவற்றை சரிசெய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
புதிதாக நியமித்த 17 அமைச்சர்களுடன் பேசிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தானும் தனது குடும்பமும் நாட்டின் மோசமான பொருளாதார நிலை காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்க முயல்வதாக ஒப்புக்கொண்டார். “கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளோம். கோவிட் -19 தொற்றுநோய், கடன் சுமை மட்டுமல்லாமல் எங்கள் பங்கிற்கும் சில தவறுகள் செய்துள்ளோம். அவற்றை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்” என்றார்.
“இந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர், இந்த நிலைமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். அதிக விலையில் அத்தியாவசியபொருட்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலில் மக்கள் வெளிப்படுத்தும் வலி, அசௌகரியம் மற்றும் கோபம் நியாயமானது" என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறினார்
மேலும், வரவிருக்கும் கடன் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான உதவிக்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை ஆரம்பத்திலேயே அணுகியிருக்க வேண்டும் என்றும், இலங்கை விவசாயத்தை முழுமையாக இயற்கையாக மாற்றும் முயற்சியில் இரசாயன உரத்தை தடை செய்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் குறைந்து வரும் அந்நியச் செலாவணி இருப்பைக் காப்பாற்றுவதற்காக இறக்குமதி செய்யப்படும் உரங்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது விவசாயிகளை மோசமாகப் பாதித்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், எந்த வருமானத்தையும் கொண்டு வராத உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகப் பெரிய அளவில் இலங்கை அரசு கடன் வாங்கியதற்காகவும் எதிர்கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டில் அரசியல் பலம் வாய்ந்த கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல வாரங்களாக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது இலங்கை அதிபர் கோட்டாபய மற்றும் அவரது மூத்த சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியில் உள்ளனர். இவர்களின் சகோதரர்களான சமல் மற்றும் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த மகன் நமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகினார்கள்.