இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக அநுர குமரா திசநாயக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக புதிய சட்டங்களை இயற்றுவதில் ஆளும் அதிபர் தரப்பு கட்சிக்கு சிக்கல் இருந்தது. இந்த நிலையில், பதவியேற்ற அநுர குமரா திசநாயக, அடுத்த நாளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.
இலங்கையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 22 தேர்தல் மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிடுவதுடன் அந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8,352 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இலங்கை நாடாளு மன்றத்தின் 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள். 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 113 இடங்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல், மூன்றில் இரண்டு பங்கு (150+) கிடைத்தால் அது சூப்பர் மெஜாரிட்டியாக மாறும்.
அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி,
எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி,
முன்னாள் இடைக்கால அதிபர் ரணிலின் ஆதரவு பெற்ற புதிய சனநாயக முன்னணி
ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட சிங்களக் கட்சிகளும்
தமிழ் கட்சிகள்!
எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி,
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.
வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்று வந்தது. ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட பிற அனைத்து கட்சிகளும் பின்னடைவையே சந்தித்தன. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
காலை 11.30 மணி நிலவரப்படி, இலங்கைத் தேர்தலில் NPP முன்னணியில் உள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுகிறது.
NPP- 137 இடங்கள் (61.56%)
SJB- 35 இடங்கள் (17.66%)
NDF- 3 இடங்கள் (4.89%)
SLPP- 2 இடங்கள் (3.14%)
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில் அதிபர் அநுர குமரா திசநாயக நன்றி தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி!” என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேக்களின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களில் வென்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி - 145 இடங்கள்
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி - 54 இடங்கள் (ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய பின்)
இலங்கை தமிழரசுக் கட்சி - 10 இடங்கள்
ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கூட்டணி - 3 இடங்கள்
ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி - ஒரு இடம்