மக்கள் போராட்டம் கைமீறி செல்வதால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ளதால் அங்கு மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போராட்டத்துக்கு பயந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச குடும்பத்துடன் தப்பியோடி விட்டார். அதிபரையும், பிரதமரையும் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினரால் கூட அடக்க முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மதியம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் பதவியில் இருந்து விலகி விடுமாறு அவரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த சூழலில், பிரதமரின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் இரவு சூழ்ந்து கொண்டனர். இதனால் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்யும் முடிவை ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மக்கள் நலன் கருதி அனைத்து கட்சி அரசு அமைய ஏதுவாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.