இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில், அதிபர் மற்றும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனு சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களால் இலங்கையில் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. இதனிடையே, இந்த பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசின் தவறான கொள்கைகள் தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஆத்திரமடைந்திருக்கும் மக்களும், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... இலங்கையில் தொடரும் நெருக்கடி - தவறுகளை ஒப்புக்கொண்ட கோட்டாபய ராஜபக்ச
இதற்கிடையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நீக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, அதிபர் கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டார். இந்நிலையில், சமகி ஜன பலேவகாயா எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. அதில், அதிபர் மற்றும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 பேர் கொண்ட அவையில், 113-க்கு பேருக்கு மேல் ஆதரவு தருவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா ஏற்கெனவே கூறியுள்ள நிலையில், இலங்கை அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.