இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அந்நாட்டு எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து அக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார்.
அதில், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் ராஜபக்ச தரப்பினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளமைக்கு, அரச தலைவர் உள்ளிட்ட அவரது ஆட்சியை பாதுகாக்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திறன் எங்களிடம் உள்ளது என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் கொள்கையை முன்வைக்க தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் வெற்றிகரமான பொருளாதாரப் பயணத்தை நடைமுறைப்படுத்தும் பொருளாதாரக் குழுவுடன் இணைந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பயனுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது. நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வுகளை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். எங்களிடம் அதேற்கேற்ற திறமையான மற்றும் தகைமையுள்ள குழு உள்ளது.
பொருளாதார மறுமலர்ச்சியை நடைமுறைப்படுத்துவதுடன், இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்நாட்டில் பொருளாதார சீர்திருத்தத்திற்கான அணுகல் எமக்கு தேவையாகவுள்ளது.
மக்கள் அபிப்பிராயத்தின் பிரகாரம் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமல் அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கிய வண்ணம் சிறந்த கொள்கைகளை கடைப்பிடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, இந்நாட்டு மக்களின் வாழ்வுரிமையை, அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம். அதற்கேற்ற மூன்று நபர்களைக் கொண்ட குழுவும், தேவையான பின்னணி பலத்தை வழங்கும் புலமைத்துவ குழுவும் இணைந்து செயற்படுகின்றன.
குறிப்பாக, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முற்போக்கான வேலைத்திட்டத்தின் தெளிவை முன்வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் ” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எதிர்வரும் 31-ம் திகதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜூன் 1-ம் தேதி பதவியேற்கிறார்.