இலங்கையில் அமைச்சரவையைக் கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு, மக்களை திரட்டி எதிர்க்கட்சியினர், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. போராட்டக்காரர்கள் தடுப்பு வேலியை அகற்றி ராணுவ வாகனத்திற்கு, தீ வைத்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், கூட்டத்தை கலைக்க முயன்ற ராணுவத்தினர், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை சம்பவத்தால் 10 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு, நுகேகொட ஆகிய பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் மக்கள் மண்ணெண்ணெய்க்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு, இலங்கை பண மதிப்பில், 2200 ரூபாயில் இருந்து 4500க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் மண்ணெண்ணெய்க்கு மாறியுள்ள மக்கள், அதை பெறுவதில் சிக்கலை சந்திக்கின்றனர்.
இலங்கை முழுவதும் டீசல் இல்லாததால், பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 254க்கு விற்கப்படுகிறது. பசியும், பட்டினியுமாக நாட்களை கழிக்கும் துயர நிலையில் தவிக்கிறார்கள் இலங்கை மக்கள்.
இலங்கையில் அமைச்சரவையை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை நிறுவுமாறு 11 கூட்டணி கட்சிகள் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இடசாரி ஜனநாயக முன்னணி, இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அமைச்சரவையை கலைக்க வேண்டுமென கூறியுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.