இலங்கையில் நடைபெற்ற எல்.டி.டி.இ உடனான போரில் 11 இளைஞர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக ராணுவ தளபதியை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிநாடு கோரிய எல்.டி.டி.இ அமைப்பினருக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற போர் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதில், 2008-09 ஆம் ஆண்டுகளில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தமிழர்கள் உட்பட ஏராளமானோர் மாயமானார்கள்.
இதில் தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் மாயமானதாக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாயமான இளைஞர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல ராணுவ தளபதி விஜேகுணரத்னே உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 9 ஆம் தேதிக்குள் ராணுவ தளபதி அட்மிரல் ரவி விஜேகுணரத்னேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி ஆஜர்படுத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மக்கள் மாயமான விவகாரத்தில் இலங்கை அரசின் ராணுவம், கடற்படை மற்றும் காவலர்களின் பங்களிப்பு இருப்பதாக மாயமானவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.