இலங்கையில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது

இலங்கையில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது
இலங்கையில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது
Published on

இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தலைநகரான கொழும்புவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையில் தற்போது கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் மூன்று பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த 21 குண்டுகளும் நாட்டு வெடிகுண்டுகள் எனத் தகவல் தெரியவந்துள்ளது. அத்துடன் அவை குறைந்த திறன் கொண்ட வெடிகுண்டுகள் எனக் கருத்தப்படுகிறது.

குண்டு வெடிப்பின் எதிரொலியாக கொழும்பு நகரமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனங்கள், பூட்டியிருக்கும் கடைகள், அலுவலகங்கள், சந்தேகத்திற்கு இடமான இடங்கள் என அனைத்திடங்களும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் 61 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 3 பேர் ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர். 

முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழல் ஏற்பட்டு, முப்படை ராணுவங்களும் உஷார் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 

நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக இலங்கையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தேகம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com