பல ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் இருந்து வரும் அண்டை நாடான இலங்கை, புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் இருக்கும் மக்கள், சரியான உணவு, உடை, மின்சார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் வருவாய் பெருமளவு சுற்றுலாவை நம்பியே இருப்பதால், அதை மேம்படுத்த அவ்வப்போது புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவோருக்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, சீனா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகளுக்கும் இலங்கைக்கு வர விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை சோதனை முயற்சியாக அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, கடினமான நேரத்தில் இந்தியா உதவிய நிலையில், இந்தியாவுடனான உறவு என்பது மிகமிக முக்கியமானது என்று தெரிவித்திருந்தது இலங்கை அரசு. குறிப்பாக, 40 ஆண்டுகள் கழித்து இலங்கை - இந்தியா இடையேயான கப்பல் போக்குவரத்தானது கடந்த 14ம் தேதி தொடங்கியது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா - இலங்கை இடையேயான உறவில் இந்த கப்பல் போக்குவரத்து சேவை புதிய அத்தியாயம் என்று பெருமிதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.