கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை: ஸ்பெயினில் நடப்பது என்ன?

கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை: ஸ்பெயினில் நடப்பது என்ன?
கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை: ஸ்பெயினில் நடப்பது என்ன?
Published on

ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்வதை ஆதரித்து 90 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர், இதன் மூலம் கேட்டலோனியாவுக்கு சுதந்திரம் வழங்க ஸ்பெயின் முன்வர வேண்டும் என்று கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பியூஜ்மாண்ட் அறிவித்துள்ளார்.

ஸ்பெயினின் வளமிக்க பகுதியான கேட்டலோனியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தனி நாடு கோரிக்கை எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்பெயின் அரசும், அந்நாட்டு நீதிமன்றமும் வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து, வாக்கு சீட்டுகளையும், வாக்கு பெட்டிகளையும் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டது. அத்துடன் வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பள்ளிகளில் ஆயிரக்கணக்கான கேட்டலோனியா மக்கள் அடைக்கலம் புகுந்தனர். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் தடையை மீறி நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது வாக்குச்சாவடிகளை சூறையாடிய காவல்துறை‌யினர், பாதுகாப்பு வழங்கி கொண்டிருந்த கேட்டலோனியா தீயணைப்பு படையினரையும் கடுமையாக தாக்கினர். இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து போர்களம் போல காட்சியளித்தது. எனினும் ஏராளமானோர் தடையை மீறி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

இந்நிலையில் கேட்டலோனியாவை ஆதரித்து 90 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக அப்பகுதியின் தலைவர் கார்லஸ் பியூஜ்மாண்ட் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா பிரிந்து செல்வதற்கான உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறினார். மரியாதை மற்றும் அங்கீகார உரிமையை இன்று நாம் பெற்றுவிட்டோம். மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை மீறி லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்து உலகத்துக்கு தெளிவான தகவலை தெரியப்படுத்திவிட்டனர். நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது என்று கார்லஸ் கூறினார்.

அதே சமயம் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் இந்த வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது சட்டவிரோதமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்துள்ள கேட்டலோனியா மக்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பதிலுக்கு ஒருங்கிணைந்த ஸ்பெயினை ஆதரித்து குரல் கொடுத்து வருபவர்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஸ்பெயின் முழுவதும் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com