அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.1 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் அதிர்ந்தன. சில கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டன. வீடுகளுக்கு நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயு குழாய் உடைந்ததால், 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இந்நிலையில், நேற்று இரவு தெற்கு கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் ஏற்பட்ட ரிட்ஜ்கிரெஸ்ட் பகுதியில் இருந்து 11 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.