தென்கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. நம்மூரில் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் வயது கணக்கிடப்படுகிறது. அதன்படி, பிறந்த நாளில் இருந்து 1 வருடம் கடந்த பிறகு அடுத்த வயது கூடுகிறது. ஆனால், தென் கொரியாவில் அப்படியில்லை. அதாவது அங்கு, குழந்தை ஒன்று பிறக்கும்போதே அது 1 வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அடுத்து, ஜனவரி 1ஆம் தேதி பிறக்கும்போதே அவர்களுடைய 2வது வயது கணக்கிடப்படுகிறது.
அதாவது, டிசம்பர் 31ஆம் தேதியே ஒரு குழந்தை பிறந்திருந்தாலும், அது மறுநாள் ஜனவரி 1ஆம் தேதியைக் கடக்கும்போது, அதற்கு 2 வயதாகக் கணக்கிடப்படுகிறது. பிறந்து ஒருநாளே என்றாலும் 2 வயதாகத்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த முறையில், அந்நாட்டில் பிறந்த நாள் தேதியில்தான் ஒருவரின் வயது கூடுதல் பெறுகிறது என்றில்லை. ஜனவரி 1ஆம் தேதியை அவர்கள் கடக்கும்போதே அவர்களுக்கு ஒரு வயது கூடி விடுகிறது. வயது கூடுவதில் பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படாது.
தென் கொரியா பின்பற்றிய இந்த முறையால் ஒருவகையில் கொரியர்களுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு சார்ந்த இழப்பீடுகளும், குழப்பங்களும் ஏற்படுவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பி வந்தன. இந்த நிலையில் பழைய வயது முறையை நீக்கி தற்போது சர்வதேச அளவிலான கணக்கீட்டு முறையை தென்கொரியா ஏற்றுக் கொண்டதுடன், அந்நாட்டு அரசு இந்தப் புதிய மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி பிறந்த நாள் அன்றே அனைவருக்கும் வயது அதிகரிக்கும். புதிய முறையை சுமார் 70 சதவிகித தென்கொரிய மக்கள் வரவேற்றுள்ளனர்.
”இந்த அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. நான் அடுத்த வருடம் 60 வயதை கடக்க இருக்கிறேன். அரசின் இத்தகைய அறிவிப்பால், நான் இளமையாக இருப்பதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வயது கணக்கீடு மாற்றத்தால் புகையிலை பொருட்கள், மதுபானம் பயன்பாட்டை தீர்மானிக்கும் வயதிலும் குழப்பங்கள் ஏற்படுவதாகச் சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் கட்டாய கல்வி, 21 மாதங்கள் ராணுவச் சேவை ஆகியவற்றிலும் மாற்றங்களை அமல்படுத்த சிறிது காலம் ஆகும். அதுவரை முந்தைய முறையே தொடரும் எனக் கூறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கை மூலம் சட்டரீதியிலான பிரச்னைகள், புகார்கள், சமூக குழப்பங்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.