நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ள வடகொரிய வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மற்றும் போலி அடையாள ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்ஐஎஸ் தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது விளாடிவோஸ்டாக்கில் உள்ள இராணுவத் தளங்களிலும், உசுரிஸ்க், கபரோவ்ஸ்க் மற்றும் பிளாகோவெஷ்சென்ஸ்க் போன்ற ரஷ்ய தளங்களிலும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் பயிற்சியை முடித்த பிறகு விரைவில் போர்க்களத்தில் அனுப்பப்பட இருப்பதாக என்.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.
வடகொரிய ராணுவ வீரர்களை, ரஷ்ய கப்பற்படை அழைத்துச் சென்றதாக, செயற்கைக்கோள் ஆதாரங்களைக் காட்டி என்.ஐ.எஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படியே, தென்கொரியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இத்தகவல் உறுதியாகும்பட்சத்தில், வெளிநாட்டுப் போரில் வடகொரியாவின் இந்த பங்கு முதல்முறையாக மிகப்பெரிய அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.
காரணம், வடகொரியா 1.2 மில்லியன் துருப்புகளைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், அது உண்மையான போர் அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, ”வடகொரியாவில் இருந்து 10,000 துருப்புகள் தனது நாட்டுக்கு எதிராகப் போரிடும் வகையில் ரஷ்யப் படைகளில் சேரத் தயாராகி வருவதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இந்தப் போரில் 3வது நாடு நுழைந்தால் அது உலகப்போராக மாறக்கூடும்” என்று எச்சரித்தார். இதற்கிடையே கடந்த அக்டோபர் 3ஆம் தேதி, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆறு வட கொரியர்களும் உள்ளடங்குவர் என உக்ரைன் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது. ”போரில் வடகொரிய துருப்புகளை ரஷ்யா ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இது ஒரு போலிச் செய்தி” என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அதுபோல், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, “வடகொரிய வீரர்கள் சண்டையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை. அதேநேரத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள், ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை ரஷ்யா போருக்காகப் பெற்று வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய பிராந்தியத்தை பதற்றத்தில் வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடன் மோதல் போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது. இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கு கைமாறாக ரஷ்யாவுடன் மிகவும் இணக்கமாக வடகொரியா செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.