“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் (96) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் (வயது 73), அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இச்சூழலில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1907 காலகட்டத்தில் எடுத்து வரப்பட்ட உலகின் மிகப்பெரிய வைரம், தற்போது மூன்றாம் சார்லஸ் பதவியேற்பின்போது பயன்படுத்த உள்ள செங்கோலில் உள்ளது. இந்த வைரத்தை தென் ஆப்பிரிக்காவிடமே திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டைச் சேர்ந்த பலராலும் முன்வைக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் இதுபற்றி வலுவாக குரலெழுப்பி இருக்கிறார்கள் தென்னாப்பிரிக்கர்கள்.
வைரத்தை தென் ஆப்பிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு ஜோகன்னஸ்பர்க்கை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மோதுசி கமங்கா என்பவரின் முன்னெடுப்பில் சுமார் 8,000 பேர் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
கல்லினன் 1 என்று அழைக்கப்படும் 530 காரட் எடை கொண்ட இந்த வைரமானது, 1905-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்கா பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்நாட்டின் காலனித்துவ அரசால் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செங்கோலில் உள்ள வைரமானது, பிரிட்டோரியாவுக்கு அருகில் வெட்டப்பட்ட 3,100 காரட் கல்லான, கல்லினன் வைரத்திலிருந்து வெட்டப்பட்டதென சொல்லப்படுகிறது. அதே கல்லில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய வைரம், கல்லினன் II என அழைக்கப்படுகிறது. இது பிரிட்டன் மன்னர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் அணியும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் உள்ளது. க்யின் மேரியின் கிரீடம், பிற அரசு குடும்பத்தினர் ஆகியோரிடம் கல்லினன் வைரங்கள் III, IV, V ஆகியவை உள்ளனவாம்.