சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பைடன், இவ்விசயத்தில் அமெரிக்கா ராஜதந்திர ரீதியாக செயல்படும் என்று கூறினார். கொரோனா தொற்றுப்பரவல், வர்த்தகக் கொள்கைகள், தைவான் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே நிலவிவரும் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்திய சில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க அதிபர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்தால் அது இரு நாடுகள் இடையிலான உறவை சீர்குலைக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் இது மற்ற உலகத் தலைவர்களுக்கும் அழுத்தத்தை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.