கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்று, ஸ்லோவாக்கியா. இந்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், இடதுசாரி ஸ்மெர் கட்சி தலைவர் ராபர்ட் ஃபிகோ வெற்றி பெற்றார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில், தலைநகர் பிரட்டிஸ்லாவா அருகே நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், பிரதமர் ராபர்ட் ஃபிகோ படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஃபிகோவுக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஸ்லோவாக்கியா அதிபர், செக் பிரதமர் பீட்ர் ஃபியாலா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது உயிர் நண்பரான விக்டர் ஆர்பன், “எனது நண்பருக்கு எதிராக நடைபெற்ற இந்தக் கொடூர தாக்குதல் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.