கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியாவின் பிரதமரும், இடதுசாரி ஸ்மெர் கட்சி தலைவருமான ராபர்ட் ஃபிகோ, கடந்த மே 15ஆம் தேதி, தலைநகர் பிரட்டிஸ்லாவா அருகே நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், ராபர்ட் ஃபிகோ படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளை அகற்ற அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் இருந்தார். இதனால், பிரதமரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், உடல்நலம் தேறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து பிரதமர் ராபர்ட் ஃபிகோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
பிரதமர் ராபர்ட் ஃபிகோவைச் சுட்ட மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.