தனது நாட்டில் உள்ள அணு ஆயுத பரிசோதனை கூடத்தை வெடி வைத்து தகர்க்கும் காணொலி காட்சியை வடகொரியா வெளியிட்டுள்ளது.
பங்க்கெய்-ரீ என்ற இடத்தில் அணு ஆயுத பரிசோதனை கூடத்தை அமைத்து, போர் தளவாடங்களை வடகொரியா தயாரித்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்த அணு ஆயுத பரிசோதனை கூடத்தை மூடப் போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தப் பரிசோதனை கூடத்தை முழுமையாக அழித்து, அதன் காணொலியை வடகொரியா வெளியிட்டுள்ளது. தகர்க்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் இருந்து அணுக் கதிர் வீச்சு வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் வடகொரியா பதட்டத்தை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் அணுஆயுத ஏவுகணைகளை பரிசோதித்து, உலக நாடுகளின் கண்டனங்களை பெற்று வந்தது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பேச்சுப்போர் வெடித்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் ஆகியோர் நேரடியாக விமர்சித்துக்கொண்டனர். இதையடுத்து தென்கொரியாவுடன், வடகொரியா கைகோர்க்க, அமெரிக்காவும் வடகொரியாவுடன் சமாதான நிலையை அடைய முன்வந்துள்ளது. இருப்பினும் இருநாட்டு அதிபர்களும் சந்திப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.